ஊரக உள்ளாட்சி தேர்தல் திமுக குற்றச்சாட்டு

சிவகங்கை, டிச.9:  சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலுக்கான வார்டு மறு வரையறை முறையாக செய்யவில்லை என திமுக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சித்தேர்தலையொட்டி தேர்தல் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். இதில் திமுக மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் பேசுகையில், ‘‘திருப்புவனம் ஒன்றியம் மாவட்ட ஊராட்சி வார்டு 12வது 13வது வார்டுகள் கடந்த 23 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு மாற்றமில்லாமல் உள்ளது. 1996ம் ஆண்டு முதல் இது போல் மாவட்ட ஊராட்சி கவுன்சில் வார்டுகள் இட ஒதுக்கீடு சுழற்சி முறை பின்பற்றப்படாமல் உள்ளது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆதிதிராவிடர் தொகுதி, பொது, இட ஒதுக்கீட்டில் மாற்றம் செய்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. தேவகோட்டை தாலுகா சண்முகநாதபுரம் ஊராட்சி செங்கற்கோவில் கிராமத்தை, கல்லல் மாவட்ட ஊராட்சி கவுன்சில் வார்டில் இணைத்துள்ளனர். திருப்புவனம் ஒன்றியம் மணல்மேடு ஊராட்சியில் உள்ள 6 வார்டில் மூன்று வார்டை மடப்புரம் ஊராட்சி ஒன்றியக்குழு வார்டிலும், எஞ்சிய மூன்று வார்டை ஏனாதி ஒன்றியக்கவுன்சில் வார்டிலும் இணைத்துள்ளனர்.

வார்டு மறு வரையறை முறையாக செய்யவில்லை. முறையாக வரையறை செய்யாமல் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது இது தவறு’’ என தெரிவித்தார். இதற்கு பதிலளித்து கலெக்டர் ஜெயகாந்தன் பேசுகையில், ‘‘ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலில் உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிய வாக்காளர் சேர்க்கை படிவம் வழங்கப்பட்டு வருகிறது. நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ஒரே குடும்ப உறுப்பினர்களின் வாக்கு பல்வேறு பகுதிகளில் மாறி உள்ளது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் தேர்தல் தொடர்பான கருத்துக்களை எப்போது வேண்டுமானாலும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்கலாம்’’ என்றார். இகூட்டத்தில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல் பிரிவு) லோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராசு, திருப்பதிராஜன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *