பெற்றோர் – ஆசிரியர் சங்கம் கலைக்க உத்தரவு

மாணவர்களின் பாதுகாவலர் என்ற போலி அடையாளத்துடன், நிர்வாக பதவிகளில் உள்ள, பெற்றோர் – ஆசிரியர் கழகத்தை, உடனடியாக கலைக்க வேண்டும்’ என, அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, சென்னையில் நடந்த, முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள் கூட்டத்தில், அவர் பிறப்பித்த உத்தரவு:பெற்றோர் – ஆசிரியர் கழகம் என்பது, பள்ளிகளின் முன்னேற்றம், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் செயல்பட வேண்டும். ஆனால், பல பள்ளிகளில், பல ஆண்டுகளாக, ஒரு சிலரே இந்த பொறுப்புகளில் உள்ளனர்.

எவ்வளவு வயதானாலும், சிலர் தங்களுக்கு அருகில் உள்ள பள்ளிகளில், பெற்றோர் – ஆசிரியர் கழக பதவியில் உள்ளனர். ஏதாவது ஒரு மாணவருக்கு பாதுகாவலராக இருப்பதுபோல் காட்டி, பொறுப்பில் உள்ளனர். இந்த பதவியை காட்டி, தங்களின் சுய அலுவல்களுக்கு தேவையானவர்களை, பள்ளிக்கு வர செய்து,சந்தித்து பேசுகின்றனர். ஆசிரியர்களுக்கு தேவையான இடங்களில் கையெழுத்து போட்டு கொடுக்கின்றனர்; பின், வீட்டுக்கு செல்கின்றனர்.

பெற்றோர் – ஆசிரியர் கழக விதிகளின்படி, தற்போது படிக்கும் மாணவரின் பெற்றோரே, பொறுப்பில் இருக்க வேண்டும். இதை, கட்டாயம் பள்ளிகள் பின்பற்ற வேண்டும். பாதுகாவலர் என்ற போர்வையில் உள்ளவர்களை நீக்கி, அந்த நிர்வாகத்தை கலைத்து விடுங்கள். தகுதியானவர்களை நிர்வாகிகளாக வைத்து, புதிய நிர்வாகம் ஏற்படுத்துங்கள். பள்ளியின் வளர்ச்சிக்கு, அவர்களை பயன்படுத்துங்கள்.இவ்வாறு, அவர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *