கண்மாய்கள் சீரமைப்பு…

பிலிப்பைன்ஸ் போல் மாறப்போகுது சிவகங்கை கண்மாய்கள்… 
சிவகங்கையில் உள்ள 12 ஆயிரம் கண்மாய்களை ரூ.200 கோடி ஜப்பான் நிதியில் சீரமைக்க தமிழக, ஜப்பான் வேளாண் பல்கலை பேராசிரியர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்திலேயே அதிக கண்மாய்கள் உள்ள மாவட்டம் சிவகங்கை. ஜப்பான் அரசு பிற நாடுகளில் பொது சுகாதாரம் காத்தல், போக்குவரத்து, விவசாயத்தில் வளர்ச்சி காணுதல் போன்றவற்றிற்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் 1984 முதல் 1999 ம் ஆண்டு வரை 2 கட்டமாக ஐரோப்பிய நிதி உதவி திட்டத்தின் கீழ் தேர்வு செய்த கண்மாய்களை புனரமைத்துள்ளன.
தற்போது இங்குள்ள 12 ஆயிரம் கண்மாய்களில் மழை நீராதார பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி பாதுகாத்தல், நீர் வரத்து கால்வாய், மடைகள், கண்மாய் ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டு, மாவட்டத்தில் கண்மாய் பாசனம் மூலம் விவசாயத்தை வளர்த்து, உணவு உற்பத்தியை அதிகரிக்க செய்யும் நோக்கில், மத்திய, மாநில அரசின் அனுமதியுடன் ஜப்பான் அரசு நிதி உதவி அளிக்க உள்ளது.
200 கண்மாய்களில் ஆராய்ச்சி:மாவட்டத்தில் உள்ள 12 ஆயிரம் கண்மாய்களை சீரமைப்பதற்கு நிதி ஒதுக்குவதற்கு முன்னதாக, பரிட்சார்த்தமாக சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட 200 கண்மாய்களை தேர்வு செய்து, அதில் கோயம்புத்துார் வேளாண்மை பல்கலை வேளாண் விரிவாக்க மைய உதவி பேராசிரியர் எம்.ஜெகதீசன், ஜப்பான் டோக்கியோ பல்கலை வேளாண் பொருளாதார துறை பேராசிரியர் கஜிஷா ஆகியோரை கொண்ட குழு ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆராய்ச்சி ஒரு ஆண்டு வரை நடக்கும்.
கண்மாய் சீரமைப்புக்கு ரூ.200 கோடி:
கோயம்புத்துார் வேளாண்மை பல்கலை பேராசிரியர் எம்.ஜெகதீசன் கூறியதாவது:ஜப்பான் நிதி உதவி திட்டத்தில் முதற்கட்டமாக சிவகங்கை கண்மாய்களை சீரமைக்க உள்ளனர். இதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறோம். தமிழக அரசிடமும், பேராசிரியர் கஜிஷா ஜப்பான் அரசிடம் அறிக்கை வழங்குவோம். இதையடுத்து ஜப்பான் அரசு சிவகங்கை கண்மாய்களை சீரமைக்க 200 கோடி ரூபாய்க்கு மேல் நிதி உதவி அளிக்கலாம். பேராசிரியர் கஜிஷா ஏற்கனவே பிலிப்பைன்ஸ், கம்போடியாவில் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதால், ஜப்பான் அரசு அவரை தேர்வு செய்து சிவகங்கைக்கு அனுப்பியுள்ளது. சிவகங்கைக்கு பின் விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், விருதுநகரில் செயல்படுத்தலாம், என்றார்.

…………………… வாட்ஸ்அப் செய்தி ……………………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *